Slider

Search This Blog

Theme images by kelvinjay. Powered by Blogger.

Recent Tube

தமிழகம்

Technology

Life & style

Games

Sports

Fashion

» » » » » மாஞ்சோலை எஸ்டேட் உருவாக்கத்துக்கு பின்னால் உள்ள சுவராஸ்யமான வரலாறு

      பசுமை செறிந்த மலைத்தொடர்கள், மலையினைப் பிளந்து செல்லும் சாலை, திகைப்பூட்டும் மலை வளைவுகள், திகிலூட்டும் சாலையோர பள்ளத்தாக்குகள், பெயர் தெரியா பெருமரங்கள், எவ்வளவோ முயன்றும் தாக்கமுடியாமல் தோற்றுப்போகும் வெயில், வாகன நடமாற்றம் அதிகமில்லா அடர்வனச் சாலையில் படகைப் போல ஆட்டியெடுத்து நம் வாகனம் பயணிக்க, 3500 அடி உயரத்தில் அமைந்த மாஞ்சோலையை அடைந்தோம்.

     சமவெளியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவு போன்று இருக்கிறது மாஞ்சோலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரித்துப் போட்ட பச்சைப் போர்வையென தேயிலை தோட்டங்கள்; நடுநடுவே சாக்கு அணிந்து வெடவெடக்கும் குளிரில் தேயிலை பறிக்கும் பெண்கள்.

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். அதற்கடுத்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என மொத்தம் உள்ள ஐந்து எஸ்டேட்களில், ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    மாஞ்சோலை எஸ்டேட் உருவாக்கத்துக்கு பின்னால் ஒரு சுவராஸ்யமான வரலாறு உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டுவந்த மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கும், அவரது உறவினர்களான எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் இடையே ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள், மன்னருக்கு ஆதரவாக போர் உதவி செய்து அவரை வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக்கடனாக, மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையில் 8500 ஏக்கர் சோலைக்காட்டை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார்.

      இந்நிலத்தை 1929-இல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிபிடிசி (தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்) என்ற தனியார் நிறுவனத்துக்கு, சிங்கம்பட்டி ஜமீன்தார் குத்தகையாக வழங்கினார். இந்த குத்தகை, தேயிலை மற்றும் மலைத்தோட்டப் பயிர்கள் பயிரிடுவதற்காக 99 ஆண்டுகளுக்கு விடப்பட்டது. இந்த சோலைக்காட்டை திருத்திதான் மாஞ்சோலை எஸ்டேட் உருவாக்கப்பட்டது.

      சுதந்திரத்திற்கு பின், ஜமீன்தார் நில ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாஞ்சோலை எஸ்டேட் அரசுடைமையாக்கப்பட்டு, வனத்துறை வசம் வந்தது. மேலும் அப்பகுதியை களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் கொண்டுவந்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அதை அறிவித்தது. இதற்கு பிபிடிசி நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்தது. பெரும்தொகை செலவு செய்து வன நிலத்தை திருத்தி மேம்படுத்தியிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பிபிடிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த குத்தகை உரிமம் தொடர அரசு அனுமதித்தது. தற்போது வரை அந்நிறுவனமே தேயிலைத் தோட்டத்தை நிர்வகித்து வருகிறது. குத்தகைக் காலம் 2029-இல் முடிவடைகிறது.

   தேயிலை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்படுகின்றனர். தேயிலை பறிக்க அதிகாலையிலேயே வந்துவிடுவார்கள். ஆண்கள் தேயிலை எடை நிறுத்துவது, மூட்டை கட்டுவது, லாரியில் ஏற்றி தொழிற்சாலையில் இறக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். தேயிலை பறிப்பதென்பது மிகக்கடினமான வேலை என்கிறார்கள் தொழிலாளர்கள். கனமழையிலும், கடும் பனியிலும், கொடுங்காற்றிலும் மலை முகடுகளில் ஏறி, மாலைவரை நின்றபடியே தேயிலை பறிக்கிறார்கள்.

      உண்ணிக்கடித்தாலும், காட்டு மாடு விரட்டினாலும், யானை புகுந்தாலும் வீட்டுக்குச் செல்லாது வேலை செய்கிறார்கள். அட்டைப்பூச்சிகளுக்கு தங்கள் ரத்தத்தை தானம் கொடுக்கிறார்கள். ஊசியாய் இறங்கும் குளிர்க்காற்றிலும் வியர்க்குமளவுக்கு தொழிலாளர்களின் வேலையில் வேகமிருக்கிறது. ஆனால் தேயிலை தோட்டம் பசுமையாக இருக்கிறதே தவிர, தேயிலை தொழிலாளர்களின் வாழ்க்கை வறண்டு போய்தான் உள்ளது. தினமும் தேநீர் அருந்தி கொண்டே செய்தித்தாள் வாசிக்கும் நாம், இந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வை பெரும்பாலும் வாசிக்கவில்லை.

     மாஞ்சோலை எஸ்டேட்டில் முன்பு 5,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அது தற்போது 2 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததாலும், வறுமையை தாக்குபிடிக்க முடியாமலும் எஸ்டேட்டை விட்டு வெளியேறி சமவெளி பகுதிக்கு வந்துவிட்டனர்.

    "தேயிலை பறிக்கும் பணியை பெண்கள் மட்டுமே செய்வோம். முன்பு தேயிலையை கைகளால் பறித்தோம். இப்போது தேயிலை பறிக்க பிரத்யேகமான பையுடன் இணைந்த கத்திரிக்கோலைப் பயன்படுத்துகிறோம். வெட்ட வெட்ட தேயிலை பைகளில் விழுந்துவிடும்.. காலையில் பனி ஊசியாய் துளைக்கும். விடியும் முன் எழுந்து வீட்டில் விறகு அடுப்பில் சமைத்து, சாப்பாடு கட்டிக்கொண்டு நடந்துசென்று மலையேறி தேயிலை பறிக்க ஆரம்பிப்போம். காலை 7.30 மணிக்குள் டிவிஷனுக்கு வந்துவிட வேண்டும். காலைவேளையில் தேயிலைகள் பனியில் நனைந்து, பறிப்பதற்கு எளிதாக இருக்கும். ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 25 கிலோ அளவிற்கு தேயிலை பறிக்க வேண்டும். மதியம் ஒருமணிநேரம் சாப்பாடு இடைவேளை. நாலரை மணிக்கு வேலை முடியும். விரும்பினால் கூடுதலாக ஒருமணிநேரம் வேலை பார்க்கலாம். அதற்கு தகுந்தாற்போல் கூலி உண்டு.

       சில சமயம் தேயிலைச் செடிகளுக்குள் புகுந்து நடக்கும் போது தேயிலை குச்சிகள் உடம்பில் கீறிவிடும். மழைக்காலத்தில் அட்டைக்கடி, மலை வழுக்குதல் தொந்தரவு இருக்கும். அந்த சமயத்துல தேயிலை பறிக்கிறது கடினமாக இருக்கும். ஊர்ல நிரந்தரமான வேலை வசதி கிடையாது. ஆனால் இங்க வருஷம் முழுவதும் வேலை கிடைக்குது. கனமழை, கடும் பனிப்பொழிவு போன்ற நேரங்களில் மட்டும் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்படும்’’ என்கிறார் சாரா.

   தேயிலை என்பது செடி அல்ல, உயரமாக வளரக்கூடிய ஒரு மரம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இளந்தளிர்களுக்காகவும், பறிப்பதற்கு வசதியாகவும் இடுப்பளவு உயரத்துக்குக் கிளைகளை கவாத்து செய்து விடுவோம். அப்போதுதான் தரமான தேயிலை பறிக்க முடியும். தேயிலை பறிப்பது நுட்பமான வேலை. கொழுந்து இலைகள் மட்டுமே பறிக்கப்படவேண்டும். ஒருமுறை செடிகளில் இருந்து தேயிலைகளைப் பறித்துவிட்டால், அதன்பிறகு ஒரு வாரம் இடைவெளிவிட்டுதான் பறிக்க வேண்டும். அப்போதுதான் இளந்தளிர் இலைகள் அதிகம் கிடைக்கும். ஒரு கிலோ டீத்தூள் தயாரிக்க நான்கு கிலோ தேயிலை தேவைப்படும். மிதமான மழை, குறைந்த பனிமூட்டம் இருக்கும்போது தேயிலை மகசூல் அதிகரிக்கும்’’ என்கிறார் நாகூர்மைதீன்.

      தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நகர்ப்புறப் பகுதியில் உள்ளதுபோல கணிசமான கூலி இல்லை. நகர்ப்புறங்களில் குளத்து வேலை, கட்டிட வேலை உள்ளிட்ட பணி செய்வோருக்கு ரூ.350 முதல் ரூ.500 வரை கூலி கிடைக்கும் நிலையில், தேயிலை தோட்டத் தொழிலாளியின் தினக்கூலி ரூ.240 மட்டுமே. குழந்தைகளின் படிப்புச் செலவு, குடும்பச் செலவு போக ஐநூறோ, ஆயிரமோ கையில் நிற்கும் அளவில்தான் ஊதியம் இருக்கிறது. இதில் எதிர்பாராத செலவுகள் வந்துவிட்டால் இவர்களின் பாடு திண்டாட்டம் தான். கேரளாவில் தோட்டத் தொழிலாளிக்கு ரூ.310 கூலி வழங்கப்படுகிறது. அதையாவது இங்கு அமல்படுத்தக் கோரி தொடர்ந்து குரல் கொடுத்தாலும், மலை முகடுகளுக்குள்ளாகவே எதிரொலித்து அடங்கி விடுகிறது.

     தொழிலாளர்கள், காடு, மேடுகளில் அலைந்து, அட்டைப்பூச்சி மற்றும் வனவிலங்குகளுக்கு மத்தியில் தங்கள் உயிரை பணயம் வைத்து மிகக்கடுமையாக உழைக்கிறோம். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு தொழிலாளியிடம் ரூ.760 தொழில்வரியாக கட்டச் சொல்கிறது. நகர்ப்புறக் கூலித் தொழிலாளர்கள்கூட மிகக் குறைந்த சம்பளம் பெறும், தோட்ட தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்வது எவ்வகையில் நியாயம்? ஏற்கெனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கிறோம். எனவே தொழில் வரி பிடித்தம் செய்வதில் இருந்து தேயிலை தொழிலாளர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும்’’ என்கிறார் கண்ணன்.

     வாரம் ஒருநாள் கீழே ஊருக்குச் சென்று ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்கி வைத்துக் கொள்வோம். தகவல் தொடர்பு தான் இங்க பெரும் பிரச்சினையா இருக்கு. பி.எஸ்.என்.எல் தவிர வேறெந்த நெட்வொர்க்கும் இங்கே வேலை செய்யாது. அதுவும் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் சிக்னல் கிடைக்கிறது. அவசரத்துக்கு தகவல் பரிமாறவோ, பெறவோ முடிவதில்லை. மாஞ்சோலையிலிருந்து கீழே மணிமுத்தாறு செல்லும் மலைப்பாதை குண்டும் குழியுமாக சிதைந்து போய் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த வழியாகச் செல்லும் அரசுப் பேருந்து சாலையோர மலை பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக ஆழம் குறைவான பள்ளத்தில் விழுந்ததால் யாருக்கும் எதுவுமில்லை. மோசமான சாலையால் பஸ் நடுவழியில் அடிக்கடி ரிப்பேர் ஆகிவிடுகிறது. இதனால் பல மணி நேரம் காட்டுக்குள்ள காத்துக்கிடக்க வேண்டியிருக்கு’’ என்கிறார் தர்மமணி.

      எஸ்டேட் நிர்வாகம் வழங்கியுள்ள ‘லைன் வீடு’ எனப்படும் குடியிருப்பில்தான் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒரு லைன் வீட்டில் நான்கைந்து குடும்பங்கள் இருக்கும். இவை எஸ்டேட் உருவாக்கப்பட்டபோது கட்டப்பட்ட பழமையான குடியிருப்புகள். 58 வயதில் ஓய்வு பெற்றவுடன் வீட்டை காலி செய்து விடவேண்டும். இளம்வயதில் பிழைப்புத் தேடி எஸ்டேட் வரும் பலர், சொந்த வீடு இல்லாமல் எஸ்டேட் வீட்டிலேயே தங்கியிருந்து பணிபுரிகின்றனர். பணி ஓய்வுக்குப் பிறகு வீடு வாசல் எதுவுமில்லாமல், சொந்த ஊருக்கும் செல்ல முடியாமலும், இங்கேயே மீண்டும் வேலை செய்ய முடியாமலும் பரிதவிக்கின்றனர்.

      பெயர் கூற விரும்பாத எஸ்டேட் சூப்பர்வைசர் ஒருவரிடம் பேசினோம். ‘’மாஞ்சோலை எஸ்டேட் தேயிலை தூள் பிறவற்றிலிருந்து மாறுபட்ட தனிச்சுவை என்பதோடு உயர்தரமிக்கது. முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே விளைவித்து தூள் தயாரிக்கிறோம். மற்ற இடங்களை விட, இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு எஸ்டேட் நிர்வாகம், நிறைய வசதி செய்துக் கொடுத்திருக்கிறது.

        தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், தண்ணீர், சுகாதாரமான குடியிருப்பு வளாகம், மத வழிபாட்டு தலங்கள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளை செய்துக் கொடுத்திருக்கிறோம். தொழிலாளர்களின் உரிமைக்கும், உழைப்புக்கும் நிர்வாகம் உரிய உதவிகள் செய்கிறது. மாஞ்சோலை பகுதி புலிகள் காப்பகமாக இருப்பதால் குடியிருப்புகளை மேம்படுத்தவோ, புதிய குடியிருப்புகள் கட்டவோ முடியாத நிலை உள்ளது. சில ஆண்டுகளாகவே தேயிலை உற்பத்தி மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதால் கம்பெனியின் லாபம் சரிந்து காணப்படுகிறது. அது சீரானதும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் எனத் தெரிகிறது’’ என்கிறார் அவர்.

     தங்களுக்குப் பின் அடுத்த தலைமுறை இந்த தொழிலுக்கு வந்துவிடக் கூடாதென்று வாழ்க்கையை தியாகம் செய்து இந்த மாலைக்காட்டுக்குள் தவவாழ்க்கை வாழ்கின்றனர். அன்றாட வாழ்க்கையை கடத்த ஒரு நாளும் விடாமல், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்கிறார்கள். குழந்தைகள் படித்து நல்ல வேலைக்கு சென்றதும் தொழிலாளர்கள் வேலையை விட்டு நின்றுபோவதை அறிய முடிந்தது. இருப்பினும், ஊர்ப்பகுதிகளில் நிலையான வேலை வசதி இல்லாததாலும், இந்த பருவநிலையிலேயே வாழ்ந்து பழகிவிட்டதாலும் நகர்ப்புறம் நோக்கி நகர முடியாமல் இருக்கிறார்கள் பலர்.

       கிளைமேட்டையும், எஸ்டேட் அழகையும் பார்த்து ‘இங்க இருக்கிறவங்க கொடுத்து வைச்சவங்க’னு வர்ற சுற்றுலாப்பயணிகள் பேசிட்டுப் போறாங்க. அவங்களுக்கு தெரியாது அரைவயிறு சோத்துக்காக இந்த தேயிலை காட்டுல உழைச்சிட்டுருக்கோம்னு.. என்றவர்.. ‘’சரி தம்பி.. மணி அஞ்சு ஆச்சு, நீங்க கிளம்புங்க.. என்று நம் அனுமதி நேரத்தை காட்டி வழியனுப்பி வைத்தார் ஒரு தொழிலாளி.

       இத்தனை சோதனைகளைத் தாண்டி தொழிலாளர்களின் உழைப்பினால் பறிக்கப்பட்ட தேயிலையிலிருந்து உருவாக்கப்பட்ட இந்த தேநீர் தான் நம்மை உற்சாகப்படுத்துகிறது. தொழிலாளர்களை?

மாஞ்சோலை எப்படிச் செல்வது?

      கோடை நெருப்பு, பரபரப்பான வாழ்க்கையை துறந்து இயற்கையோடு குதூகலிக்க அருமையான நேட்ச்சர் ஸ்பாட் மாஞ்சோலை. ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்பதைவிட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம் என்பதே மாஞ்சோலையின் சிறப்பு. தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, சுற்றிலும் பிரமிப்பூட்டும் மலைத் தொடர்களையும், பரவசமூட்டும் இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசிக்க அருமையான இடம். கட்டுப்பாடான வன மேலாண்மையால் இயற்கை எழில் குறையாத மலைப்பிரதேசமாக காட்சியளிக்கிறது மாஞ்சோலை.

      ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று மாஞ்சோலை வழக்கமான சுற்றுலாத்தளம் அல்ல. களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாஞ்சோலை அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா மற்றும் வாகனப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பத்து தனியார் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. அதற்கும் அம்பை வனச்சரக அலுவலகத்தில் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் பெறவேண்டும். அரசுப் பேருந்தில் செல்ல அனுமதி பெறத் தேவையில்லை. திருநெல்வேலி, தென்காசி, அம்பை பகுதிகளிலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்துகள் நான்கு முறை மாஞ்சோலைக்கு ஏறி இறங்குகின்றன.

       காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி நேரம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மிகக்குறுகலான, சிக்கலான மலைப்பாதை என்பதால் 20 கி.மீ தூரத்தைக் கடக்கவே இரண்டு மணி நேரமாகிறது. அதனால் காலையில் சீக்கிரமாக கிளம்பி மாஞ்சோலையை அடைந்தால் கூடுதல் நேரம் செலவழிக்கலாம். சாப்பிட சிறிய உணவுக்கடைகள் சில உள்ளன.

      பி.எஸ்.என்.எல். தவிர வேறெந்த மொபைல் சிக்னலும் கிடைக்காது. மாஞ்சோலையில் தங்குவது என்றால் அதற்கும் வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். வனத்துறைக்கு சொந்தமான விடுதிகள் தவிர, தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. மற்றபடி பார்த்துவிட்டு ஆறு மணிக்கு முன்னதாக மாஞ்சோலையை விட்டு வெளியேறி விடவேண்டும்.


«
Next
This is the most recent post.
»
Previous
This is the last post.

No comments:

Leave a Reply