Breaking News

தொலைக்காட்சி உதவி செய்யவில்லை... நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் குறித்து சேது பேட்டி...

சமீபத்தில் சின்னத்திரையில் பிரபலமான நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். ஊரடங்கு காலகட்டத்தில் அவரை போன்ற கலைஞர்களுக்கு, அரசாங்கமோ தொலைக்காட்சியோ எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் சேது.
       மதுரையை சார்ந்த வடிவேல் பாலாஜி எளிமையான குடும்பத்தை சார்ந்தவர். மருத்துவமனையில் பணிபுரிந்த வடிவேல் பாலாஜி, சினிமாவில் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வேலையை உதறித் தள்ளிவிட்டு சென்னைக்கு வந்து வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார்.

    அது இது எது, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனக்கென்று தனி முத்திரை பதித்தார். நடிகர் வடிவேலுவின் உடலசைவு,  நடிப்பு, குரல் என்று அவரைப் போலவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், அனைவராலும் வடிவேல் பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.

     ஏராளமான ரசிகர்களை தனது நகைச்சுவை மூலம் கை வசப்படுத்திக் கொண்டார். மேலும் கோலமாவு கோகிலா உள்ளிட்ட  20 திரைப்படங்களில் நடித்துள்ளார். பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படாததால், பல மாதங்களாக எந்த ஒரு வருமானம் இன்றி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

     இரண்டு வாரங்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், மீண்டும் அவருக்கு மயக்கம் ஏற்பட, உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை அன்று மரணமடைந்தார்.

   அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்  சேது செய்தியாளர்களிடம், "வடிவேல் பாலாஜி போல ஒரு மனிதரை பார்க்க முடியாது. என்னுடன் பல வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். அவரைப்போல டைமிங் உடன் நகைச்சுவை செய்ய யாராலும் முடியாது. ஸ்கிரிப்ட் இல்லாமலேயே நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்துவார்.. ஒரு நல்ல சகோதரரை இழந்துள்ளதாக நான் கருதுகிறேன். என் அம்மா இறந்த பிறகு நான் இன்று வடிவேல் பாலாஜிகாக அழுகிறேன்" என்று தெரிவித்தார்.

  மேலும் அவர் "பொது முடக்கம் காரணமாக பல்வேறு கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசாங்கமும், ஊடகமும், தொலைக்காட்சியும்  கண்டு கொள்ளவில்லை என்பதே உண்மை. . இதுபோன்ற நேரத்தில் கலைஞர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்"  என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments