Breaking News

"பள்ளிகளை திறக்க போகிறோம்" ஆர்வம் காட்டும் மாநில அரசுகள்...

        இந்தியாவில் கொரொனொ தொற்று பாதிப்பு காரணமாக நாடெங்கும் இன்னும் கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் பள்ளிகள் திறப்பது பற்றிய அரசுகளின் அறிவிப்பினை எதிர்பார்த்து வருகின்றனர்.
       இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் பள்ளிகளை, குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறப்பது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது.. அதில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர் பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வ அனுமதியுடன் பள்ளியில் வந்து பாடம் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.

       இதனை தொடர்ந்து ஆந்திரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

        இது பற்றி அரியானா கல்வி அமைச்சர் கன்வர் பால்  "ஹரியானா, பள்ளியை திறக்க தயார் நிலையில் இருக்கின்றது" என்று தெரிவித்தார். மேலும்  பள்ளிகளை சுத்திகரிக்க தேவையான பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

       ஆந்திர மாநில அரசு ஏற்கனவே செப்டம்பர் 1 முதல் பள்ளி திறக்கப்படும் என்று முன்பு அறிவித்து அதனை செயல்படுத்த திட்டம் தீட்டியிருந்தது. ஆனால் வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில் அதற்கான செயற்பாடுகள் மந்த நிலையில் இருந்து வந்தன. தற்பொழுது மத்திய சுகாதார அமைச்சகம் பள்ளியை திறக்க அனுமதி அளித்துள்ளதால், ஆந்திராவில் நாட்டில் முதல் மாநிலமாக கல்வி நிலையங்களை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      டெல்லி மற்றும் தமிழக மாநில அரசுகள் தற்போதைக்கு பள்ளி திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளன. மேலும் கொரொனொ ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த பிறகு அதை பற்றி ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.


Post a Comment

0 Comments