Breaking News

நீட் தேர்வு குறித்த மன அழுத்தத்தினால் மதுரை மாணவி தற்கொலை..

       மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் கடந்த ஓராண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதி துர்கா, மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

       மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் ஆயுதப்படை குடியிருப்பில், காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம் தனது குடும்பத்தினரோடு வாழ்ந்து வருகிறார். இவரது மகள் ஜோதி துர்கா, கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணத்தோடு நீட் தேர்வு எழுதினார். ஆனால் அதில் அவர் தேர்ச்சி அடையவில்லை. 

         மனம் தளராத துர்கா, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் கட்டாயமாக வெற்றி பெறுவேன் என்று தன் தந்தையிடம் கூறி விட்டு, கடந்த ஓராண்டாக கடுமையாக நீட் தேர்வுக்காக படித்து வந்தார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாகவும் நீட் தேர்விற்காக தயாராகி வந்துள்ளார்.

      வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நேற்றிரவு தன் தந்தையிடம் துர்கா, "இந்த வருடமும் நான் தோற்றுப் போய் விடுவேன் என்று நினைக்கிறேன்" என்று கவலையோடு கூறியிருக்கிறார். முருகசுந்தரம் அவரை சமாதானப்படுத்தி தூங்க வைத்துள்ளார்.

       தினமும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து நீட் தேர்வுக்காக படிக்க தயாராகும் துர்காக்கு காபி கொடுக்க சென்ற பொழுது, ஜோதி துர்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக தல்லாகுளம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் துர்கா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

      காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜோதி துர்கா இறப்பதற்கு முன்பாக உருக்கமாக கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். மேலும் உருக்கமான வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments