Breaking News

இரண்டு நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தீர்வு கிடைக்குமா? இந்திய- சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு..

       சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் மாநாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.  இதில் உலகமெங்கும் உள்ள அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் சந்தித்து நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் பற்றி பேசி முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
       இந்நிலையில் சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு தொடங்கி இருக்கின்றது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செப்டம்பர் எட்டாம் தேதி ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

       இந்நிலையில் நேற்று கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்கள். இதில் இரண்டு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள், சீர்திருத்தங்கள், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, பற்றி ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெய்சங்கர் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யியை சந்திக்கவுள்ளார்.

      கடந்த சில மாதங்களாக லடாக் எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை அன்று, சீன வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

      இந்த பதட்டமான சூழலில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேசயிருப்பது, இரண்டு நாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் தீர்வு கிடைக்குமா என்ற  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

      கடந்த வாரம் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments